www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

இயக்குனர் விக்ரமன் கண்ட எம்.ஜி.ஆர்!

சென்னை -  2012-03-23 00:00:00.0இயக்குனர் விக்ரமனின் பேஸ்புக்-கிலிருந்து...

1985ம் வருடம்...எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்து கிட்னி ஆப்பரேஷன் முடிச்சுட்டு இந்தியா வரப்போறாரு. அப்ப சில சொந்த வேலை காரணமா திருநெல்வேலிக்கு போயிருந்தேன்."ச்சே...தலைவர் வரும்போது நேர்ல பாக்கமுடியலையே"-ன்னு தவிப்பு எனக்கு....அந்த நேரத்துல தமிழ்நாடு முழுக்க ஒரே வதந்தி... "எம்.ஜி.ஆர். உயிரோடவே இல்லை...எலெக்சன்ல ஜெயிகிறதுக்காக ஆர்.எம். வீரப்பனும், ராஜிவ்காந்தியும் மக்களை ஏமாத்துறாங்க" அப்படி, இப்படின்னு வதந்தி...ஏன்...? தமிழ்நாட்டுல அ.தி.மு.க தலைவர்கள் சிலரே" தலைவர் உயிரோட இருக்காரா...இல்லையான்னு தெரியலே...என்று பேட்டியெல்லாம் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க...மக்களுக்கோ ஒரே குழப்பம்...எதை நம்புறதுன்னு தெரியலே...
இந்த நிலையில செய்தி வருகிறது.."எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து நாளை திரும்பிவருகிறார்" என்று.


அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது எம்.ஜி.ஆர் அருகில் நாவலர் நெடுஞ்செழியன், டாக்டர் ஸ்ரீ பாதராவ், பா.உ.சண்முகம், ஜானகி எம்.ஜி.ஆர்ஒட்டு மொத்த இந்தியாவும் "ஆப்பரேசனுக்கு பிறகு எம்.ஜி.ஆர்., எப்படி இருப்பார்னு" ஒரே எதிர்பார்ப்பு.

அப்பொழுது எங்கள் ஊரில் டி.வி. வரவில்லை...ஆகையால் ரேடியோவில் வர்ணனை செய்து கொண்டு இருந்தார்கள்.

எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்து அங்கிருந்து சென்னை வருவதாக திட்டம்.

எம்.ஜி.ஆரை வரவேற்க கிண்டியில் உள்ள ராணுவப்படை மைதானத்தில் மிகப் பெரிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்...

காலை 7 மணிக்கு விமானம் சென்னை வந்துவிடும் என்பதால் முதல் நாள் இரவே லட்சோபலட்சம் ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்துவிட்டனர். இரவு முழுவதும் மேடையில் ஆடல்...பாடல்...கலைநிகழ்ச்சிகள்...இடையிடையே தலைவர்களின் சொற்பொழிவுகள்...

திருநெல்வேலியில் எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள டீக் கடையில் ரேடியோவில் நேரடி வர்ணனையை நானும் நண்பர்கள் சிலரும் கேட்டுக்கொண்டு இருந்தோம்...நேரம் போகப்போக வர்ணனையை கேட்கும் கூட்டம் அதிகமாகிகொண்டே இருந்தது...அந்த அதிகாலை வேளையில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டுவிட்டனர்...

எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவருக்கு கை, கால் வேலை செய்யாது என்று சொன்னதாகவும் அதனால் விமானத்தில் இருந்து இறங்கும் அவரை ஒரு வீல்சேரில் அழைத்து ஆம்புலன்சில் ஏற்றி நேராக மேடைக்கு கொண்டு வந்துவிட வேண்டும்...என்பது R.M. வீரப்பன் அவர்களின் திட்டம்...

மேடையில் ஆம்புலன்ஸ் ஏறுவதற்கு வசதியாக ஒரு ரேம்ப் அமைத்து இருந்தனர்...மற்ற தலைவர்கள் ஏற வலது பக்கம் படிக்கட்டுக்கள்...

இப்பொழுது ரேடியோ வர்ணனை...

டெல்லியில் இருந்து எம்.ஜி.ஆர்., புறப்பட்டார்...

வர்ணனையை கேட்ட அனைவரும் கை தட்டி, விசில் அடித்து ஆரவாரம்...

நேரம் செல்ல செல்ல அனைவருக்கும் டென்ஷன்...

இனிமேல் எம்.ஜி.ஆர்., எப்படி இருப்பார்...:?

ஓடி, ஆடி சினிமாவில் சண்டை போட்டாரே இனிமேல் காலம் முழுவதும் வீல் சேரில் தான் இருப்பாரா...?

பக்கம்,பக்கமாக வசனம் பேசினாரே...இனிமேல் அவரால் பேச முடியாதா...? இப்படி எல்லோர் மனதிலும் கவலை.

மணி 7...

மீண்டும் ரேடியோ வர்ணனை...

"முதல்வர் வந்த விமானம் இன்னும் சற்று நேரத்தில் தரை இறங்கும் என்று அறிவிக்க பட்டு இருக்கிறது..."

மீண்டும் விசில், கைதட்டல், ஆரவாரம்...

15 நிமிடங்கள் போய்இருக்கும்...

மீண்டும் ரேடியோவில் செய்தி...

"சென்னை விமான நிலையம் முழுவதும் ஒரே பனிமூட்டமாக இருப்பதால் M.G.R. வந்த விமானம் தரை இறங்க முடியவில்லை...ஆகவே விமானத்தை பெங்களூருக்கு திருப்பலாமா என்று விமானிகள் ஆலோசித்து வருகின்றனர்..." என்று ரேடியோவில் செய்தி...

"ச்சே..என்னடா இது...தலைவர் வருவாரா...மாட்டாரா...?"

"தலைவர் உண்மையிலேயே உயிரோடு இருக்காரா...?"

"ஏதோ கோல்மால் நடக்குது..."

என்றெல்லாம் விமர்சனங்கள்...இந்த ரேடியோ அறிவிப்புக்கு பிறகு.

20 நிமிடங்கள் போயிருக்கும்...

பனிமூட்டம் விலகி விமானம் தரை இறங்க போகிறது என்று அறிவிப்பு...

இங்கு உற்சாகம்...கொண்டாட்டம்...

எம்.ஜி.ஆரை அழைத்துவர ஓடுபாதைக்கே ஆம்புலன்ஸ் செல்கிறது.
விமானத்தில் இருந்து எம்.ஜி.ஆர்., இறங்குகிறார்...

"எதற்காக ஆம்புலன்ஸ்" என்று திட்டுகிறார்..?

அவரது 4777 அம்பாசிடர் கார் வந்து இருக்கிறது... அதில் ஏறி உட்காருகிறார்...கார் புறப்டுகிறது...

வழியெங்கும் மக்கள் வெள்ளம்...அவர்களை பார்த்து கை அசைத்துக்கொண்டே ராணுவ, மைதானத்திற்கு சென்றடைகிறார்.

ஆம்புலன்சில் வருவார் என்று எதிர் பார்த்த தலைவர்களுக்கு எம்.ஜி.ஆர்., அம்பாசிடர் காரில் வருவதை பார்த்து அதிர்ச்சி...!

இருந்தாலும் அதை சமாளித்துக்கொண்டு "காரிலேயே மேடைக்கு போய்விடலாம்" என்று ஆர்.எம்.வி சொல்கிறார்... எம்.ஜி.ஆர்., அவரை திட்டிவிட்டு வலது புறம் இருக்கும் படிக்கட்டுகளில் வழக்கம்போல வேகவேகமாக ஏறி ...

மேடைக்கு வந்து அனைத்து திசைகளிலும் கைகாட்டுகிறார்...பின் பெண்களைப்பார்த்து தலையைகுனிந்து இரண்டு கைகளையும் கூப்பி வணங்குகிறார்... அப்பொழுது வந்த கைதட்டல், விசில் சத்தம் சென்னை முழுவதும் எதிரொலித்து இருக்கும்.
ரேடியோவில் வர்ணனையை கேட்டுக்கொண்டு இருந்த நாங்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து ஓருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்லிக்கொள்கிறோம்...

இப்பொழுது தலைவர் பேசுவார் என்று அறிவிப்பு...

ஒரே நிசப்தம்...

எல்லோருமே தலைவரால் பேச முடியாது என்று நினைத்துக்கொண்டு இருந்த நேரம்...

"பெரி......யோ...ர்....க......ளே, தா.....ய்....மார்....க.....ளே...."

கொஞ்சம் வார்த்தை தடுமாறியது...பலரது கண்களில் கண்ணீர்...

"என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே..."

தெளிவான உச்சரிப்பு. கம்பீரமான அதே குரல்...

இப்பொழுது எழுந்த ஆரவாரத்தை பதிவு செய்து இருந்தால் கின்னஸ் சாதனையாகி இருக்கும்...அப்படி ஒரு கைதட்டல்...

ரேடியோவில் கேட்டுக்கொண்டு இருந்த நாங்கள் உற்சாகத்தில் கத்திக்கொண்டும், கூச்சல் இட்டுக்கொண்டும் இருந்ததால் அதன்பின்பு எம்.ஜி.ஆர்., என்ன பேசினார் என்பதை கேட்க முடியவில்லை...

வழக்கமாக காலை 6 மணிக்கு வரும் தினமலர் அன்று 11 மணிக்கு தான் வந்தது...பேப்பரை வாங்கிப் பார்த்தால் எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து திரும்பிய போடோக்கள். மேடையில் ஏறிய காட்சி, இரட்டைவிரலை காட்டிய காட்சி. பெண்களைப் பார்த்து தலைகுனிந்து வணங்குவது என்று முதல் பக்கம் முழுவதும் படங்களை போட்டு இப்படிதலைப்பு வைத்திருந்தார்கள்...

நினைத்தேன் வந்தாய்...நூறு வயது....

அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது எம்.ஜி.ஆர் அருகில் நாவலர் நெடுஞ்செழியன், டாக்டர் ஸ்ரீ பாதராவ், பா.உ.சண்முகம், ஜானகி எம்.ஜி.ஆர்.

இயக்குனர் விக்ரமனை பேஸ்புக்-கில் பார்க்க இதை கிளிக் செய்யவும்...

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments:

D.Sundararajan29-Mar-2012

On seeing, the information given by director Vikraman,the events expressed by him are running like a film in the eyes.I got emotion.We will never forget Thalaivar MGR.After the death of MGR, the english alphapets becomes 23.Thalaiva..................


SAILESHs24-Mar-2012

The moment we think of that day we get emotional. Who can forget the return of the MAN of the MASS.


raj23-Mar-2012

director vikram such a nice person....mgr is universal hero.......