www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

எல்லோருக்கும் வழிகாட்டும் அப்துல் கலாம்!

சென்னை -  2012-05-22 00:00:00.0சென்னை ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியின் 13 ஆவது பட்டமளிப்பு விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் அப்துல் கலாம் ஆற்றிய உரை,முன்னுரை:

"வானத்தில் உள்ள விண்மீனைத் தொட வேண்டும் என்று நீ விரும்பினால், நீ யார் என்பது பற்றிக் கவலை இல்லை; உன் வேட்கை அதுவாக இருக்குமானால் அதுவே உன்னை வந்து அடையும்".

ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் 13 ஆவது பட்டமளிப்பு விழாவில் உங்களை சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இக்கல்லூரி தரமான தொழில்நுட்பக் கல்வியினை அளித்து அறிவு மிகுந்தவர்களாகவும், திறன் படைத்தவர்களாகவும்- அதே நேரத்தில், மனித வாழ்வில் விழுமியங்களை உணர்ந்தவர்களாகவும் மாணவர்களாகிய உங்களை உருவாக்கியுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

இனிய நண்பர்களே, இன்று "தொழில்நுட்பமும், தேசிய வளர்ச்சியும்" என்ற தலைப்பில் என்னுடைய சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விளைகிறேன்.தொழில்நுட்பமும், தேசிய வளர்ச்சியும்:

என்னுடைய பட்டப் படிப்பின் இறுதியாண்டில் நான் செய்த திட்டப் பணி (புராஜக்ட்) என்னுடைய மாணவப் பருவத்தில் மிக முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தது. நான் எடுத்துக் கொண்ட திட்டப் பணியை உரிய காலத்தில் செய்து முடிக்க வேண்டிய அவசரத்தையும், அவசியத்தையும் என்னுடைய பேராசிரியர் எவ்வாறு, எந்த உத்தியைப் பயன்படுத்தி என்னுள் விதைத்தார் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒருங்கிணைந்த முறைமை வடிவாக்கத்தைக் கற்றுக் கொள்ளுதல்:

என்னுடன் பயின்ற 6 மாணவர்கள் அடங்கிய அணிக்கு, "தாழ்நிலை தாக்குதலுக்கான ஒரு போர் விமானத்தை" (Low Level Attack Aircraft) வடிவமைக்கும் திட்டப் பணி அளிக்கப்பட்டது. இத்திட்டப் பணியில் காற்றைக் கிழித்துச் செல்லக்கூடிய ஏரோ டைனமிக் டிசைன் வரையும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. என் அணியில் உள்ள மற்ற 5 பேரும் வானூர்தியின் உந்தித் தள்ளல், கட்டுப்பாடு, வழிகாட்டுதல், ஏவியானிக்ஸ் மற்றும் அதன் கருவியியல் ஆகிய கூறுகளை நிறைவேற்றித் தரும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டனர்.

அந்த நேரத்தில் என்னுடைய வடிவமைப்புப் பேராசிரியராக இருந்தவர் அப்போது சென்னை எம்.ஐ.டி.யின் இயக்குனராக இருந்த ஸ்ரீனிவாசன் அவர்களாவார். அவர் தான் எங்களுடைய திட்டப் பணிக்கு வழிகாட்டி. நாங்கள் திட்டப் பணியை முடித்து அவரிடம் மதிப்பீட்டுக்குச் சென்ற போது, "திட்டம் நம்பிக்கை தரவில்லை; ஏமாற்றம் அளிக்கிறது" என்ற அவரது முடிவைத் தெரிவித்தார். பலர் சேர்ந்து இந்த வடிவமைப்பை உருவாக்கியதால் ஏற்பட்ட பல்வேறு இடைஞ்சல்களை நான் எடுத்துச் சொன்னேன். ஆனால் அவற்றை அவர் கேட்கத் தயாராக இல்லை.

எனவே மீண்டும் அதனை செப்பமாகச் செய்து முடிக்க ஒரு மாத காலம் தருமாறு வேண்டினேன். அதற்கு அவர், "பார் இளைஞனே! இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரம், மூன்று நாள் உனக்கு நேரம் தருகிறேன். திங்கள்கிழமை காலைக்குள் முழுமையான வடிவமைப்பு என் கைக்கு வந்து சேர வேண்டும். இல்லையென்றால் உனக்கு வழங்கப்படுகிற உதவித் தொகை நிறுத்தப்படும்" என்று சொல்லிவிட்டார்.

இது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய அதிர்ச்சி. ஏனென்றால் உதவித் தொகை தான் என் உயிரோட்டமாக இருந்த காலம் அது. அது இல்லாவிட்டால் என் படிப்பினைத் தொடர முடியாது என்ற நிலை. எனவே எனக்கு கொடுக்கப்பட்ட திட்டப் பணியை வெற்றிகரமாக, மூன்று நாட்களுக்குள் முடிப்பதைத் தவிர வேறு எதுவும் வழியில்லை.

இரவு முழுதும் நான் என் அணியினருடன் வரைபலகை முன் உட்கார்ந்தேன். அன்று இரவு எங்களுக்கு உணவும் இல்லை; உறக்கமும் இல்லை. தொடர்ந்து வேலைதான் சிந்தனையாக இருந்தது. சனிக்கிழமை நான் ஒரு மணி நேரம் இடைவெளி எடுத்துக் கொண்டேன். தொடர் கடின உழைப்பின் பயனாக ஞாயிறு காலையில் ஏறத்தாழ எங்கள் திட்ட பணி முடியும் கட்டம் வந்தது.

அப்போது எங்கள் ஆய்வகத்திற்கு யாரோ வருவது போல இருந்தது. அவர் வேறு யாரும் அல்ல. எங்கள் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தான். எங்கள் கடும் உழைப்பைப் பார்த்து, எங்களை நெருங்கி வந்து என் முதுகில் தட்டி என்னை அன்பாக ஆரத்தழுவிக் கொண்டார். அப்போது அவர் என்னைப் பாராட்டி "உன்னை நான் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கி விட்டேன் என்று எனக்குத் தெரியும். சாத்தியமில்லாத கால கெடுவுக்குள் திட்டப்பணியை முடிக்க வேண்டிய ஒரு கடினமான நிலையை உனக்குக் கொடுத்து விட்டேன், என்றாலும் மன இறுக்கத்திற்கு இடையேயும் சிஸ்டம் டிசைனை மிகச்சிறப்பாக நீ செய்து முடித்திருக்கிறாய். உண்மையில் பாராட்டுக்குரிய பணி" என்று புகழ்ந்தார்.

இத்தகைய மதிப்பீட்டின் மூலம் எங்கள் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் உண்மையிலேயே நேரத்தின் அருமையை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை எங்களுக்குள் விதித்தார். என்னுடைய அணி உறுப்பினர் ஒவ்வொருவரும் சிஸ்டம் டிசைன்(System Design), சிஸ்டம் இன்டக்ரேஷன்(System Integration), சிஸ்டம் மேனேஜ்மென்ட்(System Management) ஆகிய எல்லாவற்றையும் கொண்ட பொறியியல் கல்வியின் அவசியத்தை உணருமாறு செய்தார்.

இதன் மூலம் நான் கற்றுக் கொண்டது என்னவெனில், நமக்கு நெருக்கடியான நேரம் ஏற்படுகின்ற பொழுது ஒரு பொறி தட்டி விட்டால் நம்முடைய பணித் திறன் பல மடங்கு அதிகரிக்கும் என்பதை நான் உணர்ந்தேன். இது தான் உண்மையிலேயே நடந்தது. திறனை வளர்த்துக் கொள்வதற்குரிய உத்திகளில் ஒன்றாக இதனை நான் பார்க்கிறேன்.

இதிலிருந்து நான் சொல்ல வரும் செய்தி என்னவென்றால், ஒரு நிறுவனத்தில் புதிதாகச் சேரும் இளைஞர்கள் அவர்கள் கற்றறிந்த சிறப்புத் துறை எதுவாக இருந்தாலும் சரி, பல்நோக்கு அணுகுமுறை மற்றும் திட்டங்களுக்கு உரிய முறையில் பயிற்சியைப் பெற வேண்டும். இதன் மூலம் புதிய தயாரிப்புகள், புதுமை புனைதல், உயர் நிறுவனப் பொறுப்புகளை எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றுக்கு அவர்களை இது தயார் செய்யும்.

நண்பர்களே, பல்வேறு புலங்களில் பொருள் தயாரிப்பு, உருவாக்கும், நிர்வாகம் ஆகிய அனைத்திலும் ஒருங்கிணைந்த அறிவை நீங்கள் பெறுவதற்குத் தயாராக வேண்டும். இதனை இளநிலை பொறியியல் படிப்பில் இருந்தே நீங்கள் தொடங்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் விரும்பி எடுத்துப் படிக்கும் துறையில் தனித்துவமிக்கவர்களாக உருவாக இது வழி வகுக்கும்.
உனக்கு நிகர் நீயே:

நண்பர்களே! சற்று மேலே பாருங்கள்... உங்களுக்கு மேலே மின் விளக்குகள் எரிகின்றன. அதைப் பார்க்கும் பொழுது அதனைக் கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் நம் நினைவுக்கு வருகிறார். மின் விளக்குகள் உருவாவதற்கு அவருடைய தனித்துவமிக்க பங்களிப்பை நாம் எண்ணிப் பார்க்கிறோம்.

வானூர்தி நம் வீட்டுக்கு மேலே பறக்கும் பொழுது அதில் இருந்து எழும் ஒலியைக் கேட்கும் போது யாரை நீங்கள் நினைக்கிறீர்கள்? ரைட் சகோதரர்களை (Right Brothers) தான். இடர்மிகு பயணம், செலவு அதிகம் என்றாலும் மனிதன் பறந்து செல்லலாம் என்பதை ரைட் சகோதர்கள் நிரூபித்தார்கள்.

அதே போன்று தொலைபேசியைப் பார்க்கும் போது யாரை நினைக்கிறோம்? அலெக்ஸ்சாண்டர் கிரஹாம் பெல் தான்.வான் வழிக்கு அடுத்ததாக கடல் வழிப் பயணம் என்றால் நம் நினைவுக்கு வருபவர் ஒருவர். இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கடல் வழியாகப் பயணம் செய்வது பற்றி அவர் வினா எழுப்பினார். வானமும், கடலும் சங்கமிக்கும் தொடு வானம் ஏன் நீலமாக இருக்கிறது? என்பது பற்றி அவர் சிந்தித்தார். ஒளிச் சிதறல் தான் இதற்குக் காரணம் என்று அவருடைய ஆராய்ச்சியின் விளைவாகக் கண்டு பிடித்தார். அவர் தான் நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி.வி.ராமன்.

முறையான உயர் கல்வி எதுவும் இல்லாமலேயே தன்னுடைய தணியாத தாகம், அடங்காத ஆர்வத்தினால் கணித ஆராய்ச்சிக்கு பெரும் புதையலை அளித்துவிட்டுச் சென்றவர் ஒருவர். அந்த ஆராய்ச்சிப் புதையலுக்குள் இன்னும் ஆயிரம், ஆயிரம் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. உலகின் எல்லாப் பகுதிகளும் கணித அறிஞர்கள் இதற்கான சாட்சியங்களைத் தேடி, இதை நிரூபிப்பதற்கான கூறுகளைத் தேடி ஆராய்ச்சியைத் தொடர்ந்து கொண்டு இருக்கின்றனர்.

அத்தகைய தனித்துமிக்கவரும், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியரும், கடுமையான இயல்புக்குரியவருமான பேராசிரியர் ஜி.எச். ஹார்டியின் இதயத்தையே நெகிழ வைக்கக் கூடிய கணித மேதையைக் கண்டு பிடித்து அறிமுகப்படுத்தினார் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தக் கணித மேதை வேறு யாருமல்ல ஸ்ரீனிவாச ராமனுஜம் தான். ஒவ்வொரு எண்ணும் புனிதமானது என்று கருதிய இந்தக் கணித வல்லுனரின் பங்களிப்பு என்றும் போற்றத்தக்கது.

இன்னும் சொல்லப்போனால், வாழ்நாள் முழுவதும் அறிவியல் பற்றியே சிந்தித்து புதியன கண்டு பிடித்தல், படைப்பாக்கம், அறிவியல் ஆராய்ச்சிக்காகவே ஒட்டு மொத்த வாழ்வைச் செலவிட்ட ஒருவர், விண்வெளி ஆய்வில் 'சந்திரசேகர் அளவை' என்ற ஒன்றை அறிவியலில் உருவாக்கிக் கொடுத்தவர். இந்தியாவில் இருந்து இங்கிலாந்து கேம்ப்ரிட்ஜை நோக்கி கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு விஞ்ஞானியால் இந்த அளவை முதன் முதலாக கணக்கிடப்பட்டது. அந்தக் கணக்கைச் செய்தவர் வேறு யாருமில்லை... பேரா. சுப்பிரமணியன் சந்திரசேகர் தான்.

நண்பர்களே! இது வரை எவரும் கண்டிராத, எவரும் சென்றிராத பாதையில் சென்ற தலை சிறந்த மனிதர்களைப் பற்றி நாம் பார்த்தோம். தனித்துவ மிக்கவர்களாக அவர்கள் கடுமையாக உழைத்து. மனித குலத்திற்கு தங்கள் பங்களிப்பை செய்ததால், அவர்கள் இன்றும் நினைவு கூறப்படுகிறார்கள்.

இப்பொழுது உங்கள் முன் உள்ள கேள்வி தனித்துவமிக்க ஆளுமை பெற்று மனிதராக நீங்கள் உருவாக விருப்பமா? என்பது தான்.

இதுவரை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கூட கடந்த 10 ஆண்டுகளில் 120 லட்ச இளைஞர்களை நான் சந்தித்து இருக்கிறேன். அதில் இருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் "ஒவ்வொரு இளைஞரும் தனித்துவமிக்கவராக ஆவதற்கு விரும்புகிறார். ஆனால் உங்களைச் சுற்றியுள்ள உலகம், அல்லும் - பகலும் தன்னால் முடிந்த அளவிற்கு உங்களைச் சாதாரண மனிதர்களில் இன்னும் ஒருவராக ஆக்குவதற்கு எல்லாவற்றையும் செய்து வருகிறது.

இனிய இளைய நண்பர்களே! இது தான் உங்கள் முன் உள்ள சவால். இதற்காகத் தான் மிகக் கடுமையாக நீங்கள் போரிட வேண்டியுள்ளது. எந்த மனிதரும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு கடுமையாகப் போரிடுவதுடன், நீங்கள் விரும்பிய இடத்தை அடையும் வரை சற்றும் தளராமல் அந்தப் போராட்டத்தை நிறுத்தாமல் எடுத்துச் செல்ல வேண்டும். அது தான் தன்னிகரற்ற இடத்தை உங்களுக்குப் பெற்றுத் தரும்.

இந்தப் போராட்டத்தில் வெல்வதற்கு உங்களுக்குரிய கருவிகள் என்ன? தனித்துவமிக்க ஆளுமை உள்ளவர்களாக நீங்கள் உருவாகுவதற்கு நான்கு முக்கியக் கூறுகள் உள்ளன. வாழ்க்கையில் ஒரு பெரிய இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து அதைப் பற்றிய அறிவைப் பெற்று கடுமையாக உழைத்து அந்த மாபெரும் சாதனையை நிகழ்த்துவதற்கு தளராமல் உழைக்க வேண்டும். இந்த நோக்கத்தில் தனித்துவமிக்கவராக உங்கள் இலக்கை அடைவதற்கு ஒரு இயைந்த சூழ்நிலையை ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரி உங்களுக்கு அளித்து வருகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்தியா 2020:

நண்பர்களே! கடந்த பல ஆண்டுகளாக இளைஞர்களிடமும், நல்ல அனுபவம் பெற்றவர்களிடமும் இந்தியாவைப் பற்றிய தொலை நோக்கு பற்றி நான் விவாதித்து வருகிறேன். அவரவர் என்ன தொழில் செய்தாலும் சரி, இந்திய வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் எவ்வாறு தங்கள் பங்களிப்பைத் தர முடியும் என்பது பற்றி நான் விவாதித்து வருகிறேன். 2020 ஆம் ஆண்டிற்கான இந்திய வளர்ச்சிக்கு முக்கிய தூண்களாக விளங்கும் கூறுகளை வரிசைப்படுத்த விரும்புகிறேன்.

1. கிராமத்திற்கும், நகரத்திற்கும் உள்ள இடைவெளியை முடிந்த அளவு ஒரு மெல்லிய கோடாக குறைப்பது.

2. அனைத்து வளங்களையும் சமமாக பங்கிடுதல். சக்தி மற்றும் தரமான தண்ணீர் ஆகியவற்றை போதுமான அளவுக்கு கிடைக்கச் செய்தல்.

3. வேளாண்மை, தொழில், சேவைத் துறை ஆகியவை கூட்டிசைந்து செயல்படுதல்.

4. சமுதாய ஏற்றத் தாழ்வினால், தகுதியுள்ள எவருக்கும் விழுமியங்களுடன் கூடிய கல்வி மறுக்கப்படாதிருத்தல்.

5. தகுதி வாய்ந்த அறிஞர்கள், அறிவியல் வல்லுனர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு ஏற்ற தளமாக நம் நாட்டினை மாற்றுதல்.

6. எல்லாருக்கும் சிறந்த நலவாழ்வினை அளித்தல்.

7. வெளிப்படையான, ஊழலற்ற, உடனுக்குடன் தீர்வு அளிக்கக்கூடிய ஆட்சி முறையை ஏற்படுத்துதல்.

8. வறுமையும், கல்லாமையும் முற்றிலும் ஒழிக்கப்பட்டு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, சமுதாயத்தில் எவரும் அன்னியப்பட்டவர் என்ற எண்ணம் இல்லாமல் செய்தல்.

9. மக்கள் அனைவருக்கும் பொருள் வளம், உடல் நலம், பாதுகாப்பு, அச்சுறுத்தலில் இருந்து விடுதலை, அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு ஏற்ற சூழல், அத்துடன் நீடித்த வளர்ச்சிப் பாதையில் நாட்டினை எடுத்துச் செல்லல்.

10. உலகிலேயே வாழ்வதற்கு மிகவும் சிறந்த இடமாகவும், நம் நாட்டின் தலைமையைப் பெருமைப்படத்தக்க தாகவும் ஆக்குதல்.

வளர்ச்சி பெற்ற இந்தியாவிற்காக ஒருங்கிணைந்த செயல் திட்டம்:

இந்தியாவை ஒளிமிக்கதாக ஆக்குவதற்கு, வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு நாம் கவனம் செலுத்த வேண்டிய ஐந்து களங்கள்:

1. வேளாண்மை, உணவுப் பதப்படுத்தல்

2. கல்வி, நலவாழ்வு

3. தகவல் தொடர்பு தொழில்நுட்பம்

4. நாட்டில் எல்லா பகுதிகளுக்கும் தரமான மின்சாரம், தரைவழி போக்குவரத்து

5. உயர் பெரும் தொழில் நுட்பங்களில் தற்சார்பு

இந்த ஐந்து துறைகளும் ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. உணவு, பொருளியல், தேசிய பாதுகாப்பில் நாம் முன்னேறுவதற்கு மேற்காணும் துறைகளில் ஒருங்கிணைத்த செயல்பாடு தேவை.

ஒரு சிஸ்டம் டெக்னாலஜிஸ்டாக (System Technologist) நீங்கள் உருவாகுவதற்கு தொழில் முறையில் நீங்கள் சந்திக்ககூடிய சவால்களை எவ்வாறு மாற்றி அமைக்க வேண்டும் என்று நான் இங்கு குறிப்பிட்டேன்.

நண்பர்களே! இந்தப் பின்னணியில் நான் மேலே கொடுத்துள்ள முத்தான கருத்துகளைப் பற்றி ஒவ்வொன்றையும் கவனமாக, உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சில கருத்துக்கள் உங்கள் ஆர்வத்தைக் கிளறக்கூடிய சவால்களாக இருக்கும். இவை அனைத்தும் தொழில்நுட்பம், ஒருங்கமைப்பு, கவனக் குவிப்பு தேவைப்படும் களங்களாகும்.

பல தொழில் நுட்பங்களின் ஒருங்கமைப்பு:

தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய இரண்டும் ஒருங்கிணைந்து தற்போது ஐ.சி.டி. எனப்படும் தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பமாக உருவெடுத்துள்ளது. இந்தத் தகவல் தொழில்நுட்பத்தையும், உயிரியல் தொழில்நுட்பத்தையும் இணைத்து உயிரி தகவலியல் என்ற துறை உருவாகியுள்ளது. இதே போன்று மரபு சார்ந்த முந்தைய மின்னியல், நுண் மின்னியல் ஆகியவற்றில் இருந்து போட்டானிக் என்ற புதிய துறை உருவாகி நுகர்வோர் தயாரிப்புகளில் ஒரு புதிய வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெல்லிய இழைகளைப் பயன்படுத்தி நெகிழ்வுத்தன்மையுள்ள, உடைக்க முடியாத, இடைவெளியில்லாத காட்சிகளை உருவாக்க முடிந்தது. இதன் மூலம் பொழுதுபோக்கு மற்றும் ஊடகக் கருவிகள் துறையில் புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இவற்றைத் தாண்டி தற்போது நானோ டெக்னாலஜி (Nano Technology) எனப்படும் நுண்துகள் தொழில்நுட்பம் புதிய மலர்ச்சி பெற்றுள்ளது. மைக்ரோ டெக்னாலாஜி எனப்படும் நுன்மின்னியலை அப்படியே மாற்றிவிட்டு, எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய துறையாக நுன் தொழில் நுட்பம் உருவாகி வருகிறது. பல்வேறு துறைகளில் மிகப்பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வாய்ப்புள்ளதாக இத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது.

மருத்துவம், மின்னியல், பொருள்சார் அறிவியல் ஆகியவற்றில் மிகப்பெரும் பயன்களை அளிக்கக்கூடியதாக நானோ தொழில்நுட்பம் உள்ளது. முக்கியமாக, நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரோபாட் எனப்படும் எந்திர மனிதன் மூலம் மருந்துகளைச் செலுத்தும் முறை விரைவில் வரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு நானோ தொழில்நுட்பமும், ஐ.சி.டி. எனப்படும் தகவலியல் தொடர்பு தொழில்நுட்பமும் சந்தித்த பொழுது இன்டகிரேட்டட் சிலிக்கான் எலக்ட்ரானிக்ஸ் (Silicon Electronics), போட்டானிக்ஸ் (Photonics) ஆகியவை தோன்றின. பொருள் ஒருங்கிணைப்பும் இதன் வழியாக உருவாயின. இந்தப் பொருள் ஒருங்கு அமையவும், உயிரி தொழில்நுட்பமும் இணைக்கப்பட்ட போது இன்டலிஜென்ட் பயோசயின்ஸ் என்ற புதிய அறிவியல் துறை உருவாகி அதனைப் பயன்படுத்தி நோயற்ற வாழ்வை மக்களுக்குத் தந்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வழி ஏற்படுகிறது.

இந்தச் சூழலில் நுண்ணறிவு மிக்க மனிதர்கள் நீண்ட காலம் உயர் திறன்பாடுகளுடன் வாழ்வதற்குரிய உலகமாக இத்தொழில்நுட்பம் மாற்றவல்லது. உயிரி தொழிநுட்பம், நானோ தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் நானோ ரோபாட்களை நாம் உருவாக்குவதற்கு வழி ஏற்படும்.

நோயைக் கண்டு பிடித்து, பாதிக்கப்பட்ட உடற் பகுதியை மட்டும் சரியாகக் கண்டறிந்து, நானோ ரோபாட்கள் வழியாக நோயாளிக்கு மருந்தை உட்செலுத்தி, அதற்குரிய செறிவான சிகிச்சைகளை அளிக்க முடியும். இந்த நானோ ரோபாட் என்பது டி.என்.ஏ. அடிப்படையிலான தயாரிப்பு என்பதால், உள்ளுக்குள்ளேயே செரித்து உடலோடு கலந்து விடக்கூடியதாக இருக்கும். இதுவரை கண்டிராத வழிகளில் புதுமையான தீர்வுகளை நோக்கி உழைக்கும் மிகச் சிறந்த வல்லுனர்களை தென் கொரியாவில் அமைந்துள்ள ஒரு ஆய்வகத்தில் நான் சந்தித்தேன். அவர்களுடைய தயாரிப்பு மாதிரியையும் அங்கு நான் கண்டேன்.

அறிவியல் ஒருங்கிணைப்பு கொள்வதும், கொடுப்பதுமாக உள்ளது. இதற்கு நான் ஒரு எடுத்துக்காட்டு கூற விரும்புகிறேன். அண்மையில் நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்திற்கு சென்று அங்கு பணி புரியும் ஹார்வர்ட் ஸ்கூல் ஆப் என்ஜீனியரிங் (Harvard School of Engineering) அண்ட் அப்பளைட் சயின்சஸ் (Applied Science) துறையைச் சேர்ந்த தலை சிறந்த பேராசிரியர்களைச் சந்தித்தேன்.

அப்பொழுது பேராசிரியர் ஹான்குன் பார்க் என்பவர் நானோ நீடில்கள் எனப்படும் சிறப்பு வகை ஊசியைக் கண்டுபிடித்தது பற்றி என்னிடம் காண்பித்தார். நாம் மருந்தைச் செலுத்தக்கூடிய ஒவ்வொரு செல்லையும் எது என்று அடையாளம் கண்டு அதற்குள்ளே நேரடியாக மருந்தைச் செலுத்தக்கூடிய அளவுக்கு நுண்ணிய ஊசியை பேராசிரியர் ஹான்குன் பார்க் தம் கண்டுபிடிப்பாக என்னிடம் காட்டினார். இவ்வாறு உயிரி அறிவியலை நுண்துகள்கள் அறிவியல் எவ்வாறு உருவாக்குகிறது என்பதை நாம் பார்க்கலாம்.

அடுத்து, நான் சந்தித்த விஞ்ஞானி பேரா. வினோத் மனோகரன். அவருடைய ஆராய்ச்சிகளின் மூலம் உயிரி அறிவியல் எவ்வாறு நானோ பொருள் சார்ந்த அறிவியலை உருவாக்குகிறது என்பதை எடுத்துக் காட்டினார். செல்ப் அசெம்பிளிங் பார்டிகிள்ஸ் (Self Assembling Particles) எனப்படும் தாமே ஒருங்கிணைத்துக் கொள்ளும் நுண் துகள்களை டி.என்.ஏ. (DNA) வகையைச் செலுத்தும் பொழுது, முன்னரே தீர்மானிக்கப்பட்ட குணநலன்களை அதில் போதிக்க முடியும் என்றும். அதன் மூலம் தாமாகவே அந்தச் செல்களில் ஒருங்கிணைப்பை உருவாக்க முடியும் என்றும் எடுத்துச் சொன்னார்.

இதன் அடிப்படையிலேயே தாமாகவே கருவிகளை உருவாக்கி விண்வெளியில் மனிதர்களே இல்லாத குடியிருப்புகளை உருவாக்குதற்கு டாக்டர். கே. எரிக் டிரெக்ஸ்லரின் ஆய்வும் நமக்கு ஒரு தீர்வாக அமைகிறது. ஆக, ஒரு ஆய்வகக் கட்டடத்தின் உள்ளேயே இரு வேறு அறிவியல்கள் எவ்வாறு உருவாகின்றன? எந்த இரும்புத் திரையும் இல்லாமல் இரு வேறு அறிவியல்கள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட முடியும்? என்பதையெல்லாம் அங்கே காண முடிந்தது.

இவ்வாறு அறிவியல்கள் இணைந்து ஒன்றுக்கொன்று கொள்வதும், கொடுப்பதுமாக செயல்படுவதன் மூலம் எதிர்காலத்தை நாம் சிறப்பாக வடிவமைத்து தொழில் துறையின் தேவைகளுக்கேற்ப தயாராக்குவதற்கு இது வழி வகுக்கிறது. நண்பர்களே! பல்வேறு தொழில்நுட்ப இரும்புத் திரையை அகற்றுவதற்கு நீங்களெல்லாம் தயாராக இருக்கிறீர்களா?

அடுத்ததாக, இப்பொழுது ஒரு புதிய போக்கு உருவாகி வருகிறது. அதன்படி, தொழில்நுட்பத்தில் மிகத் தகுதி வாய்ந்த. நீடித்த வளர்ச்சிக்குரிய முறைமைகளை உருவாக்குவதன் தேவை உலக அளவில் உணரப்பட்டு வருகிறது. 21 ஆம் நூற்றாண்டில் அறிவுசார் சமுதாயத்தின் புதிய பரிமாணமாக- அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் ஆகியவை கைகோர்த்து செல்ல வேண்டிய புதிய பரிமாணமாக இதைப் பார்க்கிறோம்.

இவ்வாறாக புது யுகத்திற்கான மாதிரி என்பது உயிரி நுண் துகள் தகவல் சூழலியல் ஆகிய பயோ (Bio), நானோ (Nano), இன்போ (Info), ஈகோ (உயிரி தொழில்நுட்பம், நுண் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்பம், சுற்றுச் சூழல்) ஆகிய நான்கு பரிமாணம் உள்ள தி நியூ ஏஜ் மாடல் தற்போது இதன் மூலம் உருவாக்கப்படுகிறது.

நிறைவு:

நிறைவாக நான் ஒரு கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். எதற்காக உங்கள் பெயரை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? உங்களை நீங்கள் எப்படி வடிவமைத்து உருவாக்கிக் கொள்ள வேண்டும்? இதைப் பற்றி உங்கள் எண்ணங்களை ஒரு பக்கத்தில் தெளிவாக எழுதுங்கள். அந்த ஒரு பக்கம் என்பது மனித வரலாற்றில் ஒரு மிகப் பெரிய பகுதியாக அமையலாம்.

இந்திய தேசிய வரலாற்றில் அந்த ஒரு பக்கத்தை உருவாக்கியதற்காக காலம் உங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளும். அது புதிய கண்டுபிடிப்பாக இருக்கலாம். புதுமை புனைவாக இருக்கலாம்... சமுதாய மாற்றத்திற்கான பக்கமாக இருக்கலாம்... வறுமை ஒழிப்பாக இருக்கலாம்... அநீதிக்கு எதிரான போராட்டமாக இருக்கலாம்... அல்லது நதி நீர் இணைப்புக்கு திட்டமிட்டுச் செயலாற்றுவதாக இருக்கலாம்... எந்தத் துறையானாலும் உங்களை வரலாறு நினைவு கூறும் பக்கமாக இருக்கட்டும்.
லியோமுத்துவுக்கு அப்துல்கலாம் பாராட்டு:

அப்துல்கலாம் தனது உரையின் தொடக்கத்தில் பேசும் பொது,

"இன்று விழாவிற்கு நான் வரும் போது நுழைவாயிலில் பள்ளி மாணவ- மாணவிகள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தார்கள். அவர்கள் அத்தனை பெரும் குடைபிடித்துக் கொண்டு (பெரிய தொப்பி) வெயிலுக்கு தற்காத்தபடி நின்றார்கள். பொதுவாக நான் செல்லும் விழாக்களில் இது போல் பள்ளி மாணவ-மனைவியர் வரவேற்பு கொடுக்கும் போது அவர்களை வெயிலில் காய வைத்து விடுவார்கள். அதைக் கண்டு எனக்கு கோபமாக இருக்கும். ஆனால் இன்று அப்படியில்லாமல் அந்த மாணவ- செல்வங்களுக்கு வசதி செய்து கொடுத்த உங்கள் கல்லூரி தலைவர் திரு. லியோமுத்துவை நான் பாராட்டுகிறேன். அவரது அன்புள்ளத்தைக் கண்டு மகிழ்கிறேன்" என்று குறிப்பிட்டுச் சொன்னார். அவர் குறிப்பிட்டது சாய்ராம் கல்லூரி குழுமத்தின், அதே வளாகத்திலுள்ள சாய்ராம் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்களை.
English Summary:

To read above tamil speech in english, Click here...

வீடியோ காட்சி:மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani on Facebook, Twitter, Google+)

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments:

ramki29-May-2012

Interesting information and excellent talk by Dr Kalam.