சரத்குமார் இரு வேடங்களில் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் "நாட்டாமை". இது நவம்பர் 2, 1994 தீபாவளி சமயத்தில் வெளியானது. படத்தினைப் பார்க்க முதல்வர் ஜெயலலிதா விரும்புவதாகக் கூறி தகவல் அனுப்ப, அப்போது போயஸ் தோட்டத்துடன் நல்லுறவில் இருந்த சரத்குமார், படத்தின் பிரதியொன்றை பெற்று அனுப்பி வைத்தார். போயஸ் தோட்டத்தில் உள்ள பிரத்யேக திரையரங்கில் படத்தினை பார்த்தனர் முதல்வர், தோழி மற்றும் குடும்பத்தினர். பார்த்து விட்டு தீபாவளியன்று "ஜெ.ஜெ" டி.வியில் ஒளிபரப்பு செய்து விட்டனர்.தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, சரத்குமார் மட்டுமல்ல, இச்செய்கையைக்கண்டு திரைஉலகமே அதிர்ந்து போனது. அதாவது ஜெ ஆட்சியில் சசிகலா குடும்பம் அராஜகத்தின் உச்சத்தில் இருந்த சமயம் அது. அதிலிருந்து சரத்குமார் கார்டனுடன் இருந்த நட்பிலிருந்து விலகிக்கொண்டார்.
இதற்கு மறுநாள் "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தினையும் யாருடைய அனுமதியும் இன்றி ஜெ.ஜெ டி.வியில் ஒளிபரப்பினர். இதுபற்றி படத்தின் உரிமை பெற்றிருந்த எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் அப்புவிடம் கூறி " என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டேன். "ஆட்சியில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் அவர்களைப்போய் நான் என்ன செய்ய முடியும்?" என்று கூறிவிட்டார்.
நம்மாலானதைச் செய்வோம் என்று கருதி இதை ஒரு செய்தியாக எழுதி "தினமலர்" நாளிதழில் கொண்டு கொடுத்தேன். அன்று "தினமலர்" ஜெ ஆட்சியோடு நல்லுறவில் இருந்த நேரம். அதனால் எனக்காக அதை சாதாரண துணுக்குச் செய்தியாக வெளியிட்டனர்.
அன்று 'ஜெ.ஜெ' டிவியை நிர்வகித்தவர் சுதாகரனின் சகோதரர் பாஸ்கரன்.
இதுபோல் சசிகலாவின் அராஜகங்கள் இனியும் வரும்.
- இதயக்கனி ஆசிரியர்
|